மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் பாவித்து வாகனங்கள் செலுத்தும் சாரதிகளை கண்டறிய மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸ் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்துடன் இணைந்து வீதிகளில் பிரயாணிக்கும் வாகனங்களை நிறுத்தி அதன் சாரதிகளை நடமாடும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் விசேட நடவடிக்கை இன்று புதன்கிழமை(11) மட்டு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் இடம்பெற்று வருவதாக மட்டு மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குணதிலக்க தெரிவித்தார்.
நாட்டில் தொடர்ந்து தினம் தினம் இடம்பெற்றுவரும் வாகன வீதி விபத்துக்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த வீதி விபத்துக்களை தடுப்பதற்கான விசேட திட்டத்தின் கீழ் மதுபோதை மற்றும் மதுபானங்கள் பாவித்துவிட்டு வாகனங்கள் செலுத்தும் சாரதிகளை கண்டறிய நடமாடும் மருத்துவ பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இதற்கமைய இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த நடமாடும் மருத்துவ பரிசோதனை நடவடிக்கை மட்டக்களப்பு நகரில் முக்கிய சந்திகளில் போக்குவரத்து பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வீதியால் பிரயாணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் தொடக்கம் கனரக வாகனம் வரை நிறுத்தி அதன் சாரதிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் விசேட பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இந்த நடமாடும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் பஸ்வண்டி மட்டு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இலங்கை போக்குவரத்து பஸ் வண்டி மற்றும் தனியார் போக்குவரத்து பஸ் வேன் சாரதிகள் கனரக வாகன மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உட்பட வாகனங்களை நிறுத்தி அதன் சாரதிகளின் சலத்தை பெற்று உடன் பரிசோதனைக்கு உட்படுத்தி அவர் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவித்துள்ளாரா என கண்டறியப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.











