2027ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது அனைத்து பிரஜைகளுக்கும் வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதும், உண்மையான மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதுமே தமது பிரதான நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் இருந்த குடும்ப ஆட்சியை முறியடித்து மக்கள் தமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மத்திய கிழக்கில் மூண்டுள்ள போர் நிலை நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டமை நாட்டின் வலுசக்தித் துறையைப் பெரும் சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதன் விளைவாக, பல்வேறு துறைகளில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 147 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொருளாதார முன்னேற்றம் குறித்துப் பேசிய ஜனாதிபதி, 2025 ஆம் ஆண்டில் நடப்புக் கணக்கு வரலாற்றிலேயே மிக உயர்ந்த அளவாக 1,719 மில்லியன் அமெரிக்க டொலர் உபரியைப் பதிவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் 9 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் கடன் விகிதம் 95 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆறாவது மீளாய்வின் கணிப்பின்படி, 2032 ஆம் ஆண்டிற்குள் பொதுக் கடன் 87 சதவீதமாகக் குறையக்கூடும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை தரமதிப்பீட்டு நிறுவனங்களால் ‘CC+’ நிலையிலிருந்து ‘B-‘ நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2008 ஆம் ஆண்டில் எமிரேட்ஸ் நிறுவனத்துடனான கூட்டாண்மை ரத்து செய்யப்பட்டதிலிருந்து, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மொத்தம் 528 பில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்து கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 4,487 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வாகன இறக்குமதிகள் 3 பில்லியன் டொலருக்கும் அதிகமாக இருந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கூடுதல் செலவுகள் இருந்தபோதிலும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 7 பில்லியன் டொலருக்கும் அதிகமாக உள்ளதாகவும், வருடாந்த பணவீக்கம் 2026 அக்டோபரில் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.











