மைக்ரோசொப்ட் (Microsoft) நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் ஏற்பட்ட உலகளாவிய பழுது காரணமாக, கனடாவின் மொன்றியல் நகரில் மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல முக்கிய சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுட்லுக் (Outlook) மின்னஞ்சல் சேவை, ‘கோபைலட்’ (Copilot) செயற்கை நுண்ணறிவு மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இதர முக்கிய டிஜிட்டல் சேவைகள் திடீரென முடங்கின.
இதனால் கனடா உட்பட உலகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மொன்றியல் நகரில் அமைந்துள்ள மொன்றியல் பல்கலைக்கழக மருத்துவமனை மையம் (CHUM) மற்றும் யூனிவர்சிட்டி ஹெல்த் சென்டர் (Jewish General Hospital) உள்ளிட்ட பல முன்னணி மருத்துவமனைகளின் இயல்பு நிலை, இந்தத் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டது.
இந்தத் திடீர் முடக்கம் காரணமாக, நோயாளிகளுக்கான சந்திப்பு கோரிக்கைகளைப் பரிசீலிப்பதில் வழக்கத்தை விட அதிக நேரம் எடுப்பதாகவும், சில மருத்துவ சேவைகள் தற்காலிகமாக தாமதமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
அவசரத் தேவைகளுக்காகவும், முன்பதிவுகளை ரத்து செய்ய விரும்புபவர்களுக்காகவும் பிரத்யேக தொலைபேசி எண்கள் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட்டன.
குறிப்பாக, யூனிவர்சிட்டி ஜெனரல் மருத்துவமனையில் அவுட்லுக் மற்றும் கோபைலட் சேவைகள் முற்றிலுமாக முடங்கியதால், நோயாளிகளுக்கான உறுதிப்படுத்தல் மின்னஞ்சல்களை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டதுடன், உள்வரும் மின்னஞ்சல்களையும் உடனடியாகப் பெற முடியாத நிலை உருவானது.
இருப்பினும், இந்த மருத்துவமனைகளைக் கண்காணிக்கும் ‘சந்தே கியூபெக்’ (Santé Québec) நிறுவனம், அங்கு மைக்ரோசொப்ட் சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும், நிலைமையை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தத் திடீர் முடக்கத்தால், அலுவலகத் தொடர்புகள், கல்வி நிறுவனங்களின் பணிகள் மற்றும் அவசர கால சேவைகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் மைக்ரோசொப்ட் சேவைகள் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











