யாழ்ப்பாணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து தலைமறைவானவரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி, பல இலட்ச ரூபாய்களை பெற்று, அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாது மோசடி செய்துள்ளார்.
அது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தனித்தனியாக முறைப்பாடுகளை வழங்கியிருந்தனர்
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் தலைமறைவானார்.
அது தொடர்பில் பொலிஸார் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த நிலையில், நீதிமன்று குறித்த நபருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பித்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக குறித்த நபர் தொடர்பிலான தகவல்கள் தெரியாத நிலையில், அந்நபரின் அசையும் அசையா சொத்துக்களை முடக்க நடவடிக்கைளை எடுக்குமாறு மன்று பொலிஸாருக்கு உத்தரவிட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











