கியூபெக் மாகாணத்தில் உள்ள செயின்ட்-ஹயாசிந்த் (Saint-Hyacinthe) பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், போலி நிறுவனங்களைத் தொடங்கி அரசாங்கத்தின் வரித் தொகையை மோசடி செய்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 9,25,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பெபர் அகஸ்டோ கால்டெரான் ஆர்டிலா (Faber Augusto Calderon Ardila) என்பவரே இந்த வரி மோசடியில் ஈடுபட்டுள்ளார். கியூபெக் விற்பனை வரி (QST) மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (GST) மீள்செலுத்துதல் (refunds) தொகையைப் பெறுவதற்காக, அவர் எத்தகைய வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபடாத 78 வெற்று நிறுவனங்களை (shell companies) உருவாக்கியுள்ளதாக கியூபெக் வருமான வரித்துறை (Revenu Québec) தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் ஊடாக, டிரம்மாண்ட்வில்லி (Drummondville) பகுதியில் நாணய மாற்றும் அலுவலகமாகவும் செயற்பட்ட இறைச்சிக் கடை ஒன்றின் மூலம், 10 மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் 191 வரி மீள்செலுத்துதல் காசோலைகளை அவர் பணமாக்கியுள்ளார்.
இதன் மூலம் மொத்தம் கிட்டத்தட்ட 800,000 டொலர்களை அவர் முறைகேடாகப் பெற்றுள்ளார்.
வழக்கை விசாரித்த கியூபெக் நீதிமன்றம், கியூபெக் விற்பனை வரி (QST) தொடர்பான மோசடிகளுக்காக 48 மாதங்கள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.
மேலும், பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (GST) தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு கூடுதலாக 24 மாதங்கள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது சிறைத்தண்டனையானது முதல் தண்டனையுடன் சேர்த்து ஒரே கட்டமாக (concurrently) அனுபவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் பெரும்பான்மையான மக்களும் நேர்மையான வர்த்தக நிறுவனங்களும் தங்களது பங்களிப்பு வரிகளைச் சரியாகச் செலுத்தி வரும் நிலையில், வரி மோசடிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமானது எனவும், இது சமூக நீதியைக் காப்பதற்கான முன்னெடுப்பு எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.











