டித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) நடைபெற்றது.
வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளைக் கண்டறிந்து, அதனைச் சீர்செய்வது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு இணைப்பாளர் மருங்கன் மோகன் மற்றும் வீடமைப்பு அதிகாரசபையினர் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உயர் பிரதேச செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் தெரிவிக்கையில்,
பல்வேறு காலங்களில் நிவாசம் அமைப்பதற்கான நிதிகள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அவற்றுக்கு முறையான கணக்குகள் கொடுக்கப்படவில்லை, பலரும் தங்களின் வீடுகளைப் பாதியிலேயே அமைத்துள்ளனர்.
மேலும், 2018 ஆம் ஆண்டு முதல் மக்களுக்கு வீடு கட்டிக்கொள்ள ரூ. 20,000, ரூ. 30,000, ரூ. 40,000, ரூ. 50,000 என தவணை முறையில் பணம் வழங்கப்பட்டு மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
யுத்தத்தினால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த மக்களில் 586 பேருக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகள் வழங்கத் தகுதி பெற்றுள்ளனர். மேலும், வீடுகளை பாதியில் கட்டிய வீடுகளைப் பூர்த்தி செய்யத் தேவையான பணம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
டித்வாவினால் பாதிக்கப்பட்ட 617 குடும்பங்களுக்கு ரூ. 1.5 இலட்சம் வழங்க அங்கீகாரம் கிடைத்துள்ளது. 1,800 வீடுகளுக்கு தலா ரூ. 20 இலட்சம் நிதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 3,000-க்கும் அதிகமான குடும்பங்களுக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டங்களுக்கான முறையான மற்றும் துல்லியமான வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்க விவாதிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் ஆண்டில் (அதாவது இன்னும் 1.5 ஆண்டுகளில்) கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் 3,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதிகள் கிடைக்கப்பெற்றுள்ளதால், அதனை முறைப்படி செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், கிரேட்டர் கிளிநொச்சி (Greater Kilinochchi) குடிநீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக 1,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











