மொன்றியல் நகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் நகரத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை அல்லது நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
மொன்றியல் நகர சபையின் பத்தாண்டு மூலதனத் திட்டத்தின் (Programme décennal d’immobilisations – PDI) கீழ், வீடமைப்பு விநியோகத்தை அதிகரிப்பதற்காகத் திட்டமிடப்பட்ட பல நீண்டகாலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது அல்லது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நமூர்-ஹிப்போட்ரோம்-காவென்டிஷ் மற்றும் நீல வழித்தடப் பாதை தவிர்ந்த ஏனைய திட்டங்களுக்கான நிதி கடந்த ஆண்டை விடக் குறைக்கப்பட்டுள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில் லஷின்-எஸ்ட் திட்டத்திற்கான நிதி 106.8 மில்லியன் டொலர்களிலிருந்து 51.2 மில்லியன் டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தீவுப் பகுதியில் (West Island) அமைக்கப்படவிருந்த ‘கிராண்ட் பார்க் டி எல்’வெஸ்ட்’ பசுமைப் பூங்காத் திட்டத்திற்குக் கடந்த ஆண்டு 70.6 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2027 ஆம் ஆண்டிற்காக 989,000 டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், மெர்சியர்-ஹோசெலாகா-மைசோனுவ் (Mercier–Hochelaga-Maisonneuve) மற்றும் சுட்-வெஸ்ட் (Sud-Ouest) பகுதிகளில் இரண்டு சுற்றுச்சூழல் மறுசுழற்சி மையங்களை (Ecocentres) அமைப்பதற்காகக் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 47.3 மில்லியன் டொலர் திட்டம், இம்முறை வரவு செலவுத் திட்டத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











