மொன்றியலில் உள்ள பிரபல உணவு விற்பனை நிலையமான ‘பிரெசர்ஸ்‘ (Fressers) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மயோனைஸ் அடிப்படையிலான ‘டிப்பிங் சோஸ்’ (Dipping Sauce) உணவு வகைகள் சந்தையிலிருந்து அவசரமாகத் திரும்பப் பெறப்படுகின்றன.
அவற்றில், கல்லீரலைப் பாதிக்கும் ஆபத்தான ‘ஹெபடைடிஸ் ஏ’ (Hepatitis A) வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது.
கியூபெக் மாகாண விவசாயம், மீன்பிடி மற்றும் உணவு அமைச்சு (MAPAQ) இந்த அவசர எச்சரிக்கையையும் தயாரிப்புகளைத் திரும்பப் பெறும் (Recall) அறிவிப்பையும் விடுத்துள்ளது.
மொன்றியல் நுகர்வோர் தங்களின் குளிர்சாதனப் பெட்டிகளில் (Fridges) இந்த குறிப்பிட்ட சாஸ் வகைகள் இருக்கின்றனவா என்பதை உடனடியாகச் சரிபார்த்து, அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அமைச்சின் அறிவிப்பின்படி, “Le” Dip – “The” Dip என்ற வணிகப் பெயரில், குளிர்சாதனப் பிரிவில் வைத்து விற்கப்பட்ட சோஸ் உணவு வகைகளே இவ்வாறு திரும்பப் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.











