தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கான புதிய மூன்று மாடி கட்டிடத்தை கட்டி அடுத்த ஆண்டு இறுதிக்குள் கையளிப்பதாகவும், புதிய கட்டிடம் கையளிக்கப்படும் போது, புதிய மருத்துவ உபகரணங்களும் , போதிய பணியாளர்களும் வழங்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விஜயம் செய்த சுகாதார அமைச்சர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பில் ஒரு உறுதியான வாக்குறுதியை அளிக்க விரும்புகிறேன். ஒரு பொறுப்புள்ள அமைச்சு என்ற வகையில், அடுத்த வருடத்திற்குள் இந்த மூன்று மாடிக் கட்டிடத்தை நாங்கள் முழுமையாகக் கட்டி முடிப்போம். அதை எம்மால் செய்ய முடியும்.
இந்தக் கட்டிட வேலைகள் கடந்த காலங்களில் தாமதமானதற்குக் காரணம், இந்த வருடம் வரை இதற்கான முறையான தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் (NPD) அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அந்த அனுமதி எமக்குக் கிடைத்துள்ளது.
இந்த வருடத்திற்கான பட்ஜெட்டில் இதற்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்டுமானப் பணிகளுக்காக இந்த ஆண்டு சுமார் 70 மில்லியன் ரூபாயை அமைச்சால் ஒதுக்க முடியும்.
எஞ்சிய தொகையை அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்குவோம். அத்துடன், தற்போது புதிய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான (Procurement) முதற்கட்டப் பணிகளையும் ஆரம்பித்துள்ளோம்.
ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு நீங்கள் தற்போதுள்ள உபகரணங்களைக் கொண்டு பணியாற்ற வேண்டியிருக்கும். ஆனால், புதிய கட்டிடம் அமையும்போது உங்களுக்கு புதிய வசதிகளும் புதிய உபகரணங்களும் தேவை என்பதை நான் அறிவேன். எனவே, அதற்கான கொள்வனவுப் பணிகளை ஆரம்பித்துள்ளோம்.
அத்துடன் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் பணியில் 95 வீதம் வரை தற்போது நிறைவடைந்துள்ளது.
எனவே, வரும் அக்டோபர் மாதத்திற்கு முன்னதாக இதற்கான அனுமதியைப் பெற்று, புதிய பணியாளர்களை நாம் வேலைக்கு அமர்த்த முடியும்.
ஒட்டுமொத்த சுகாதாரத் துறையிலு ம் பணியாளர் பற்றாக்குறை மற்றும் சில சிரமங்கள் இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது வட மாகாணத்தில் மட்டுமல்ல, மத்திய அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளிலும் இந்த பணியாளர் பற்றாக்குறை உள்ளது.
இறுதியாக நான் கூற விரும்புவது, இந்தக் கட்டிடக் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டே ஆரம்பித்து, 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய முயற்சிப்போம் என்ற உறுதியான வாக்குறுதியை வழங்குகிறேன்” என தெரிவித்தார்.











