புள்ளி-விபரவியல் திணைக்களம் (Statistics Canada) இன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, மே மாதத்தில் ஏற்பட்ட பாரிய வேலைவாய்ப்பு எழுச்சியைத் தொடர்ந்து ஜூன் மாதத்திலும் வேலைச் சந்தை தனது சாதகமான போக்கைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ஜூன் மாதத்தில் புதிதாக 18,000 வேலைவாய்ப்புகள் சேர்க்கப்பட்டதன் மூலம், நாட்டின் வேலையின்மை விகிதம் 6.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இது கடந்த ஜனவரி மாதத்தில் காணப்பட்ட வேலையின்மை விகிதத்திற்கு நிகரானது என்பதுடன், பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்த 6.6 சதவீதத்தை விடச் சாதகமான விளைவாகும்.
ஜூன் மாதத்தில் நாட்டில் உருவான புதிய வேலைவாய்ப்புகள் அனைத்தும் முழுநேரப் பணிகளாக அமையாமல், பெரும்பாலும் பகுதிநேரப் (Part-time) பணிகளாகவே காணப்பட்டன.
தங்குமிடம் மற்றும் உணவுச் சேவைகள் (Accommodation and food services) மற்றும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் (Wholesale and retail trade) ஆகிய துறைகளிலேயே இந்த வேலைவாய்ப்புகள் அதிகம் குவிந்திருந்தன.
இருப்பினும், நாட்டின் உற்பத்தித் துறை (Manufacturing sector) கடந்த மாதத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இத்துறையில் மட்டும் ஜூன் மாதத்தில் 17,000 வேலைவாய்ப்புகள்
இழக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா விதித்துள்ள வர்த்தக இறக்குமதி வரிகள் (Tariffs) கனேடிய உற்பத்தித் துறையில் தொடர்ந்து அழுத்தங்களை ஏற்படுத்தி வருவதால், 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இத்துறை ஒட்டுமொத்தமாகச் சுமார் 61,000 வேலைகளை இழந்துள்ளதாகக் புள்ளி-விபரவியல் திணைக்களம்
சுட்டிக்காட்டியுள்ளது.











