மொன்றியல் நகரில் உள்ள வில்-எமார்ட் (Ville-Émard) பகுதியில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலில் 42 வயதுடைய நபர் ஒருவர் தீவிர காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தை ஆண்டின் 13ஆவது கொலைச் சம்பவமாகப் பதிவுசெய்துள்ள மொன்றியால் பொலிஸார் (SPVM), தப்பிச் சென்ற சந்தேகநபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சட்-ஓவெஸ்ட் (Sud-Ouest) பெருநகரப் பிரிவுக்குட்பட்ட மங்க் வீதி (Monk Boulevard) மற்றும் பியர்-ஹெரூக்ஸ் வீதி (Pierre-Héroux Street) சந்திப்புக்கு அருகில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் காயமடைந்த நிலையில் நபர் ஒருவர் காணப்படுவதாக, மொன்றியல் பொலிஸாருக்குப் அவசர தொலைபேசி அழைப்புகள் கிடைத்தன.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார், உடலில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 42 வயது நபரை மீட்டனர்.
அவசர மருத்துவப் பிரிவினரால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேகநபர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, தெளிவற்ற காரணங்களுக்காகப் பாதிக்கப்பட்ட நபர் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர் என, மொன்றியால் பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஜோஹானி சார்லண்ட் (Johany Charland) தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் இடம்பெற்ற பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள பொலிஸார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் கொலைக் குற்றப் பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











