இன்றைய நவீன உலகில் மக்கள் மிகுந்த பரபரப்புடன் தமது வேலைகளைச் செய்துவரும் நிலையில், முறையற்ற வாழ்க்கைமுறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் உருவாகும் தொப்பை அவர்களது தோற்றப் பொலிவையும் உடல் ஆரோக்கியத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது.
பலருக்கு பிரச்சினையாக அமைய கூடிய இந்த தொப்பை, மனித உடலில் தோலடி கொழுப்பு மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பு (Visceral Fat) என இரு வகைகள் சேர்வதால் உருவாகிறது. இதில் ஆபத்தான உள்ளுறுப்பு கொழுப்பானது கல்லீரல் மற்றும் குடல் போன்ற முக்கிய உறுப்புகளுக்குப் பின்னால் படிந்து இதய நோய், டைப்-2 நீரிழிவு போன்ற தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.
மரபணு காரணங்கள், அதிகப்படியான கலோரி உட்கொள்ளல், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் ஆகியவை தொப்பை பெருகுவதற்கான முதன்மைக் காரணமாக அமைகின்றன.
நவீன வாழ்க்கை முறையில் ஏற்படும் மன அழுத்தம் ‘கார்டிசோல்’ ஹார்மோனை அதிகரித்து பசியைத் தூண்டுவதுடன், அடிவயிற்றில் கொழுப்புச் சேமிப்பைத் தீவிரப்படுத்துகிறது.
மேலும், 7 மணி நேரத்திற்கும் குறைவான போதிய தூக்கமின்மை மற்றும் உடல் உழைப்பற்ற நீண்ட நேர உட்கார்ந்திருக்கும் பழக்கம் ஆகியவை உடலின் வளர்சிதை மாற்றத்தைக் (Metabolism) குலைத்து, கொழுப்பு எளிதில் தேங்க வழிவகுக்கின்றன.
வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை மட்டும் தனித்தனியாகக் குறைக்கும் ‘ஸ்பாட் ரிடக்ஷன்’ சாத்தியமில்லை என்பதால், முறையான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி மூலமே முழு உடல் கொழுப்பைக் குறைக்க முடியும்.
அதற்காக உணவில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் புரதச் சத்தை அதிகரிப்பது, சர்க்கரை மற்றும் மைதாவைத் தவிர்ப்பது, ஏரோபிக் மற்றும் எடை தூக்கும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதுடன், தரமான தூக்கம் மற்றும் மன அழுத்த மேலாண்மையைக் கடைப்பிடிப்பதன் மூலமே ஆரோக்கியமான முறையில் தொப்பையைக் வெற்றிகரமாகக் கரைக்க முடியும் என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.











