உக்ரைன் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கிரிவி ரிஹ் நகரில் உள்ள ஒரு பரபரப்பான வணிக வளாகத்தைக் குறிவைத்து ரஷியா நடத்திய கொடூரமான ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி சொந்த ஊரான இந்நகரில் பகல் நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் 22 குழந்தைகள் உட்பட 120-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகப் பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் 29 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தத் தாக்குதலை “முற்றிலும் வஞ்சகமான மற்றும் இழிவான பயங்கரவாதச் செயல்” என உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி கடுமையாகச் சாடியுள்ளார்.
முதல் தாக்குதல் நடந்த அரை மணி நேரத்திற்குப் பிறகு, சம்பவ இடத்திற்கு மீட்புப் பணிகளுக்காக விரைந்து வந்த அவசர கால மீட்புக் குழுவினரைக் குறிவைத்து திட்டமிட்டே இரண்டாவது ரஷிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
சர்வதேச சமூகம் ரஷியாவின் இந்த அக்கிரமத்திற்கு உரிய முறையில் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
போர் நான்கரை ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், உக்ரைன் நகரங்கள் மீதான தனது வான்வழித் தாக்குதல்களை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு தலைநகர் கீவ் மீது ரஷியா நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பதிலடியாக, ரஷியாவின் போரிடும் திறனைக் முடக்கும் நோக்கில் உக்ரைனும் ரஷிய எல்லைக்குட்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இராணுவ உள்கட்டமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்களை அதிகரித்து வருகிறது.











