அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே இறுதி நேரத்தில் பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட உடன்படிக்கையின் “முழு விவரங்களையும்” பகிரங்கமாக வெளியிடுமாறு எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்கிற்கு (Dominic LeBlanc) கன்சர்வேடிவ் கட்சியின் கனடா-அமெரிக்க உறவுகளுக்கான நிழல் அமைச்சர் சுவலோய் மஜும்தார் (Shuvaloy Majumdar) அனுப்பியுள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையின் இரகசியங்களை தாங்கள் கோரவில்லை என்றும், மாறாக ஒட்டாவாவும் வொஷிங்டனும் ஏற்கனவே அறிந்துள்ள உடன்படிக்கை விவரங்களையே கோருவதாகவும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நடவடிக்கை, நாட்டின் எதிர்காலப் பாதை குறித்துக் கனடிய மக்கள் சுதந்திரமாக விவாதிக்க உதவும் என மஜும்தார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கனடாவைத் தொழில்மயமாக்கலில் இருந்து பின்னுக்குத் தள்ளும் ஒருதலைப்பட்சமான சுங்கவரிகளையோ அல்லது நாட்டின் நலனுக்கு எதிரான மோசமான உடன்படிக்கையையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லீவ்ரே (Pierre Poilievre) உட்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒருமித்த கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











