அணுசக்தி விவகாரம் தொடர்பான மோதலைத் தொடர்ந்து, ஈரானின் அனைத்து பொருளாதார வருவாய் ஆதாரங்களையும் முடக்கும் நோக்கில் அமெரிக்கா “Operation Economic Outcast” என்ற புதிய கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.
ஈரானை உலகளாவிய வர்த்தக சந்தையிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் கீழ், ஈரானுடன் வர்த்தக உறவு வைத்துள்ள பிற நாட்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீதும் அமெரிக்கா தடைகளை விதிக்கத் தொடங்கியுள்ளது.
இதன்படி, ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்கள் மற்றும் 3 இந்தியர்கள் மீதும் அமெரிக்கா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஈரானின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான சீனா கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டே சீனா-ஈரான் இடையேயான வர்த்தகம் நடைபெற்று வருவதாகவும், ஐநா பாதுகாப்பு சபையின் ஒப்புதல் இல்லாத ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பொருளாதாரப் போரும் அதிகபட்ச அழுத்தமும் பதற்றத்தை மட்டுமே அதிகரிக்கும் என்றும், பேச்சுவார்த்தை ஒன்றே இப்பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் என்றும் வலியுறுத்தியுள்ள சீனா, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் அமெரிக்கா குறுக்கிடக் கூடாது என எச்சரித்துள்ளது.
தங்களின் தேசிய நலன்களையும் நிறுவனங்களின் உரிமைகளையும் பாதுகாக்க அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய பதிலடி அளிக்கப்படும் என்றும் சீனா எச்சரித்துள்ளது.











