ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தங்கி, மருத்துவக் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு 2வது முறையாகத் தயாராகி வந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது மாணவி குஷ்பு படேல், தனது வாடகை குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி குஷ்பு படேல் தனது தங்கையுடன் லேண்ட்மார்க் சிட்டி பகுதியில் அறை எடுத்துத் தங்கிப் படித்து வந்துள்ளார்.
வழக்கம்போல பயிற்சி வகுப்பு முடிந்து அறைக்குத் திரும்பிய தங்கை, நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது குஷ்பு தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
உடனடியாக மீட்டுக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக எம்.பி.எஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் எந்தவொரு தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்படவில்லை என்றபோதிலும், கடந்த முறை எழுதிய நீட் தேர்வில் 450 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் தனக்குக் குறைந்த மதிப்பெண் கிடைத்ததாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகக் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோட்டாவில் தீவிர கல்விப் போட்டி காரணமாக நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 8 நீட் மாணவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.











