ரஷ்யாவில் உள்ள ஒரு மின்னணுப் பொருட்கள் கடையில், வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்வதற்காகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ரோபோ(Humanoid Robot) ஒன்று வாடிக்கையாளரைத் தாக்க முயன்ற விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரஷ்யாவில் உள்ள பிரபல மின்னணுப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில், வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்வதற்காகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சேவை ரோபோ (Humanoid Service Robot) ஒன்று, தன்னைத் தள்ளிவிட்ட வாடிக்கையாளரைத் திரும்பத் தாக்க முயன்ற விசித்திரச் சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடைக் கண்காணிப்புக் கேமராவில் பதிவான அந்த வீடியோவில், கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் மரியாதை நிமித்தமாக அங்கிருந்த ரோபோவிடம் கை குலுக்குவதற்காகக் கரங்களை நீட்டியுள்ளார்.
ஆனால், அந்த ரோபோ அதற்கு எந்தவிதப் பதிலும் அளிக்காமல் அமைதியாக நின்றுள்ளது. இதனால் அதிருப்தியும் விரக்தியும் அடைந்த அந்த நபர், ரோபோவை லேசாகத் தள்ளிவிட்டு நகர்ந்துள்ளார்.
இதனால் எதிர்பாராதவிதமாக இயங்கிய அந்த ரோபோ, திடீரெனக் கோபமடைந்தது போலத் தனது கால்களால் அந்த வாடிக்கையாளரைத் திரும்பத் திரும்ப எட்டி உதைத்துத் தாக்க முயன்றது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இருவர், உடனடியாக ஓடிவந்து அந்த ரோபோவைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
இருப்பினும், தனது கட்டுப்பாட்டை இழந்தது போலக் காணப்பட்ட அந்த ரோபோ, தடுத்து நிறுத்த வந்த ஊழியர்களையும் ஆக்ரோஷமாகத் தாக்க முற்பட்டது.
இந்த அபூர்வ நிகழ்வின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல வைரலாகி வருகின்றன.
இந்தச் சம்பவத்தைக் கண்ட இணையவாசிகள் பலர், இது பிரபல ஹாலிவுட் திரைப்படமான ‘தி டெர்மினேட்டர்’ மற்றும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தமிழில் வெளியான ‘எந்திரன்’ திரைப்படத்தில் வரும் ‘சிட்டி’ ரோபோவின் கோபக்காரக் காட்சிகளை நினைவுபடுத்துவதாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.











