அயோத்தி ராமர் கோயில் நிர்வாகத்தைச் சீரமைக்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ‘ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ அறக்கட்டளையின் முதல் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அயோத்தியில் நடைபெற்ற அறக்கட்டளைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இப்பதவிக்காக பெறப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்வுக்குழு இறுதியாக இவரைத் தேர்வு செய்துள்ளது.
சமீபத்தில் கோயில் உண்டியல் காணிக்கை மற்றும் நிதி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் இரு அறங்காவலர்களும் விலகிய சூழலில், நிர்வாகச் செயல்பாடுகளைத் திறம்பட மேற்கொள்ள இந்த புதிய சிஇஓ பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் தியோரியாவைச் சேர்ந்த ஜிதேந்திர மிஸ்ரா, இந்திய விமானப்படையில் 38 ஆண்டுகள் பணியாற்றி ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் போது மேற்கு விமானப் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய அனுபவம் மிக்கவர் ஆவார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிஇஓ, கோயிலின் ஒட்டுமொத்த நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள், கூட்ட நெரிசல் மேலாண்மை, பணியாளர்கள் நிர்வாகம் மற்றும் நிதிச் செயல்பாடுகளை முழுமையாகக் கவனிப்பார்.
அதேவேளையில், கோயிலின் ஆன்மீக மற்றும் மத சடங்குகளில் அவர் தலையிட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக, அறக்கட்டளையின் பொருளாளராக இருந்த கோவிந்த் தேவ் கிரி புதிய பொதுச் செயலாளராகவும், மகேஷ் பக்சந்த்கா புதிய பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.











