கனடாவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாகவும், கனடாவுடனான பொருளாதாரக் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவது குறித்தும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான மூலோபாய உறவுகளைப் பலப்படுத்தக் பிரதமர் மார்க் காரினே (Mark Carney) தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் தலைவர் நாடியா கல்வினோ செய்திச் சேவையொன்றுக்கு அளித்த பேட்டியில், இரு தரப்பிற்கும் இடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்த “இதுவே சரியான தருணம்” எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, முக்கிய கனிமங்கள் (critical minerals) அகழ்ந்தெடுப்பு மற்றும் அது சார்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான கட்டமைப்பைக் கண்டறிய வங்கி உத்தேசித்துள்ளது.
மேலும், எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) குழாய்கள் போன்ற பாரம்பரிய சக்தித் திட்டங்களை விட, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பசுமை ஆற்றல் (green energy) உற்பத்தி சார்ந்த திட்டங்களிலேயே தமது வங்கி அதிக கவனம் செலுத்தும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ‘கனடா முதலீட்டு உச்சிமாநாட்டின்‘ மூலம் கனடிய வணிகங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்காக, சுமார் 500 பில்லியன் டொலர் பெறுமதியான புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகக் மத்திய அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











