ஒன்டாரியோ மாகாணம், பெல்லிவில்லியில் உள்ள ‘சன்ஸ் ஆஃப் ஜேக்கப்’ (Sons of Jacob) யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பரிமாற்றத்தில் காயமடைந்து உயிரிழந்த நபர், தாக்குதலுக்குச் சில வாரங்களுக்கு முன்பிருந்தே யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைப் பரப்பி வந்ததுடன், புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டு வந்தமை புதிய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த நபர் கனடிய ஆயுதப்படையின் முன்னாள் வீரரான ஷான் வார்ட் (Sean Ward – 29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
‘யோம் கிப்பூர்’ (Yom Kippur) வழிபாட்டிற்காக வழிபாட்டாளர்கள் கூடியிருந்த வேளையில், ஜெப ஆலயத்திற்கு வெளியே ஷான் வார்ட் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒன்டாரியோவின் விசேட புலனாய்வுப் பிரிவு (SIU) வெளியிட்டுள்ள தகவலின்படி, வார்ட் தனது வேட்டைத் துப்பாக்கியால் (Shotgun) பெல்லிவில்லி பொலிஸ் அதிகாரி ஜெஃப் ஸ்மித் (Jeff Smith) மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
பதிலுக்குப் பொலிஸாரும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் பல சுற்றுகள் தோட்டாக்கள் சுடப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஜெஃப் ஸ்மித் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











