சைபீரியாவிலுள்ள பிளேக் ஆராய்ச்சி முனையத்தின் ஊழியர் ஒருவர் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த வேறு எவருக்கும் நோய் பாதிப்பு ஏற்படவில்லை என ரஷ்ய சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் வியாழக்கிழமை மறுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் “இரண்டாவது நபருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்ற செய்தி தவறானது என ரஷ்ய செய்தி நிறுவனங்கள் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த அனைவரிடமும் பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றும் தன்மையுடைய நோய்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கொள்ளப்பட்ட சுமார் 5,000 ஆய்வகப் பரிசோதனைகளின் முடிவுகளில் ஆபத்தான நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அக்டோபர் 2ஆம் திகதி உயிரிழந்த 28 வயதான டார்யா ஷிபிலோவா (Darya Shipilova) என்ற ஆய்வக ஊழியரின் மரணத்திற்கு பிளேக் நோய்தான் காரணமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் ரஷ்ய சுகாதாரத் துறை உறுதியான தகவலை இன்னும் வெளியிடவில்லை.
இதுவரை, காரணம் கண்டறியப்படாத நிமோனியா (pneumonia) அழற்சி காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் பரவும் அபாயம் எதுவும் இல்லை என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், சர்வதேச அளவில் நிலவும் கவலைகளை அவர்களின் பதில் இன்னும் தணிக்கவில்லை.
காரணம் கண்டறியப்படாத நிமோனியா பாதிப்புடன் இரண்டாவது ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகளை உறுதிப்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை ரஷ்யாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.











