பார்வையற்றோருக்கான தேசியப் பாடல் போட்டியான “ஸ்வர மஞ்சரி – 2026” இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் பங்கேற்கவுள்ளனர்.
சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, இந்த இறுதிப் போட்டி நாளைய தினம், வியாழக்கிழமை, பத்தரமுல்லை சுஹுருபாயா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சமூக சேவைகள் திணைக்களத்தின் பார்வையற்றோர் மறுவாழ்வு அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு, மொத்தமாகப் பத்து போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
சாவகச்சேரியைச் சேர்ந்த குலேந்திரன் ஜெகதீசன் மற்றும் யாழ்ப்பாணப் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த றெஜிரொபின்சன் கீர்த்தனா ஆகிய இருவரே இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.
இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காகக் கொழும்பு செல்லவுள்ள இருவரும், இன்று புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனை நேரில் சந்தித்துள்ளனர்.
இதன்போது, மாவட்டச் செயலாளர் இருவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தேசிய மட்டப் போட்டியின் இறுதிச் சுற்றில் யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள இருவருக்கும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.











