சென்னையில் மழைபாதிப்பு பணிகளுக்காக ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்துள்ளார்.
அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும், வடகடலோர பகுதிகளில் புதிய மேகக் கூட்டங்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று(17.10.2026) 6 இடங்களில் அதி கனமழை பெய்த நிலையில், இன்று 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதுடன், நாளை கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு பெய்த அதி கனமழை காரணமாக 280 இடங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி கமிஷனர் சமீரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மழை நீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ராட்சத ஜெனரேட்டர்கள் மற்றும் டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு, இன்று காலைக்குள் 273 இடங்களில் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டதாக கமிஷனர் தெரிவித்தார்.
மேலும் 9 இடங்களில் சாய்ந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன.
இந்நிலையில், மழைபாதிப்பு முன்னெச்சரிக்கை பணிகளைப் பார்வையிடவும், அது குறித்து ஆய்வு செய்யவும் முதலமைச்சர் விஜய் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வருகை தந்தார்.
அங்குள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையம் மற்றும் அவசர கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் துரிதமாக செயல்படுமாறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
முதலமைச்சராகப் பதவியேற்ற பின் விஜய் ரிப்பன் மாளிகைக்கு வருவது இதுவே முதல்முறையாகும். தொடர்ந்து அவர் பொறுப்பு அமைச்சர்களுடன் மழைபாதிப்பு தடுப்பு குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.











