வவுனியா மாவட்டத்தில் இம்முறை பெரும்போக நெற்செய்கை நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க. விமலரூபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள 9 கமநல சேவை நிலையங்களின் கீழ், 63,235 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விவசாயிகளின் நெற்செய்கை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில், அவர்களுக்குத் தேவையான உரங்கள், விதைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, மாவட்டத்தில் உள்ள 9 கமநல சேவை நிலையங்களும் முழுவீச்சில் செயற்பட்டு வருவதுடன், விவசாயிகளுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளை விரைவாக வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இம்முறை பெரும்போகத்தில் சிறந்த விளைச்சலைப் பெற்று மாவட்டத்தின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், விவசாயிகள் தற்போது நிலத்தைப் பண்படுத்தும் பணிகளிலும் விதைப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.











