இயக்குநர் பாரதிராஜா நடித்த கடைசித் திரைப்படமான ‘புலவர்’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளதுடன், படம் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் கிராமத்து மணம் கமழும் கதைகள் மற்றும் எதார்த்தமான மனிதர்களைத் திரையில் உயிர்ப்பித்துத் தனக்கென தனித்துவமான பாணியை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
பல வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர், இந்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி காலமானார்.
அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாக அமைந்தது.
இந்நிலையில், அவர் கடைசியாக நடித்த ‘புலவர்’ திரைப்படம் திரைக்கு வரத் தயாராகியுள்ளது.
முருகையா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரேச்சல் ரெபெக்கா, ஹலோ கந்தசாமி, ரவிச்சந்திரன், வெற்றிவேல் ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
தற்போது ‘புலவர்’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகி உள்ள நிலையில், இப்படம் வருகிற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரில் பாரதிராஜாவின் திரைத் தோற்றத்தை மீண்டும் ரசிகர்கள் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், அது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது.











