விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11ஆம் தேதி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், மறுநாள் 12ஆம் தேதி அதிகாலை மர்மமான முறையில் மாயமானார்.
இதுகுறித்துப் பெற்றோர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படைகள் அமைத்துத் தேடுதல் வேட்டையைத் நடத்தினர்.
இருப்பினும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து இந்த வழக்கைச் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையிலான போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
சத்தியமங்கலம் போலீசார் ஆவணங்களை ஒப்படைத்த நிலையில், சி.பி.சி.ஐ.டி பிரிவின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 2 நாட்களாக ஆலம்பூண்டி கிராமத்தில் முகாமிட்டுள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார், சிறுமியின் தாய், தந்தை மற்றும் உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி அவர்கள் அளித்த பதில்களைப் பதிவு செய்து கொண்டனர்.
மேலும் சிறுமி மாயமான வீட்டின் பகுதியை வரைபடமாக வரைந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று 3வது நாளாகத் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கைப் புதிய கோணத்தில் விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, மாயமான சிறுமி உயிருடன் இருக்கவே வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அவர் விற்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், விரைவில் சிறுமி மீட்கப்படுவார் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
சிறுமி மாயமாகி இன்றுடன் 13 நாட்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











