உக்ரைன் மீதான போரில் ரஷ்யா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தலைநகர் கீவ் மீது கொத்து வெடிகுண்டுகளை (cluster bombs) வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடுகள் நடந்துவரும் சூழலில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் உக்ரைன் மேற்கொண்ட ‘விவால்டி நடவடிக்கை’ (Operation Vivaldi) உள்ளிட்ட எதிர் தாக்குதல் மூலம் ரஷ்யப் படைகளின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைனியத் தரப்புத் தெரிவித்துள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில், இந்த இலையுதிர் காலத்தின் தொடக்கத்திலிருந்து ரஷ்யா கைப்பற்றியதை விட அதிகமான பகுதிகளைத் தங்கள் படைகள் மீட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் செயற்கைக்கோள் சேவைத் தடைகள் மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உக்ரைன் தனது முன்னரங்கப் பகுதிகளை ஒருங்கிணைத்து வருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
முன்னரங்கப் களத்தில் போதிய வெற்றிகளைப் பெற முடியாததால், ரஷ்யப் படைகள் பொதுமக்கள் மீதும் உக்ரேனின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை அதிகரித்துள்ளன எனவும், கடந்த 22 ஆம் திகதியன்று கீவ் நகர் மீது கொத்து வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா வீசியதாகவும் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டினார்.
குறிப்பிட்ட இடைவெளியில் வான்வெளியில் வெடித்துச் சிதறும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த வெடிகுண்டுகள், பொதுமக்கள் மற்றும் பரந்த அளவிலான பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சக ஆலோசகர்கள் தெரிவித்தனர்.











