கியூபெக்கில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அப்பிள் வகையான ஓர்லியன்ஸ் அப்பிள், இந்த இலையுதிர்காலத்தில் கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் பின்னர் இந்த அப்பிள் வகை சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
2002ஆம் ஆண்டு முதல், ஹனிகிரிஸ்ப் மற்றும் எம்பயர் ஆகிய அப்பிள் வகைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கலப்பின உருவாக்கப் பணிகளின் மூலம், பிரகாசமான சிவப்பு நிறத்துடனும், அதிக இனிப்புச் சுவையுடனும், மொறுமொறுப்பான தன்மையுடனும் ஓர்லியன்ஸ் அப்பிள் உருவாக்கப்பட்டுள்ளது.
கியூபெக்கின் பழத்தோட்டங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கிடைத்து வந்த இந்த அப்பிள், தற்போது மளிகைக் கடைகளிலும் விற்பனைக்கு வரவிருப்பதால் நுகர்வோர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பழத்தோட்ட உரிமையாளர்கள் தெரிவிப்பதன்படி, இந்த அப்பிள் நீண்ட நேரம் மொறுமொறுப்பான தன்மையைத் தக்கவைத்துக்கொள்வதுடன், அதிக இனிப்புச் சுவையையும் கொண்டுள்ளது. இதனால், எதிர்காலத்தில் பிரபலமான ஹனிகிரிஸ்ப் அப்பிளுக்குப் போட்டியாக இது அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த அப்பிளை நேரடியாகச் சாப்பிடுவதற்கு மட்டுமன்றி, அப்பிள் பை உள்ளிட்ட உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கும் பயன்படுத்த முடியும் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சமைக்கும்போதும் அதன் துண்டுகள் எளிதில் உடைந்து சிதறாமல் இருப்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகக் குறிப்பிடப்படுகிறது.
கியூபெக்கின் ஃப்ரெலிக்ஸ்பர்க் பகுதியில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஓர்லியன்ஸ் அப்பிள் மரங்கள் நடப்பட்டுள்ளன. முறையான சேமிப்பு மற்றும் பதப்படுத்தும் நடைமுறைகள் மூலம், ஆண்டின் குறைந்தது பத்து மாதங்களுக்காவது இந்த ஆப்பிளை விநியோகிக்க முடியும் என உற்பத்தியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் சுங்கவரி தொடர்பான சிக்கல்களின் பின்னணியில், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் மீது கியூபெக் நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டி வருவதாக அப்பிள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கியூபெக்கில் விளையும் ஆப்பிள்களை இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு மாற்றாக அதிகளவில் சந்தைப்படுத்துவதன் மூலம், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஓர்லியன்ஸ் ஆப்பிளின் வருகை கியூபெக்கின் உள்ளூர் பழ உற்பத்தித் துறைக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.











