வடக்கு – கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான ஊடக நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வதாகப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், யாழ். ஊடக அமையத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது, வடக்கு – கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என யாழ். ஊடக அமையத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர், தமது அரசாங்கம் தெற்கு மற்றும் வடக்கு ஊடகவியலாளர்கள் எனப் பிரித்துப் பார்ப்பதில்லை என்றும், கடந்தகால ஆட்சியாளர்களைப் போன்று தமது அரசாங்கம் செயற்படாது என்றும் தெரிவித்தார்.
மேலும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் தமது ஆட்சிக்காலத்தில் நிச்சயமாக நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், அதற்குத் தேவையான கால அவகாசத்தை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், ஊடகவியலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றைத் தன்னிடம் சமர்ப்பிக்குமாறும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உரிய தரப்பினரை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பில், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான கபிலன் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.











