இலங்கை மாணவர்கள் தென் கொரியாவில் உயர்கல்வியைத் தொடரவும், அங்கு வேலைவாய்ப்புகளைப் பெறவும் வழிவகுக்கும் புதிய உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் எனப்படும் NIOSH மூலம் தெரிவுசெய்யப்படும் இலங்கை மாணவர்கள், தென் கொரியாவின் சாங்ஷின் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்புக் கிடைக்கும்.
மேலும், தென் கொரியாவின் கியோங்சங்னம்-டோ மாகாணத்தில் உள்ள தொழில்துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அங்கு நீண்டகாலம் வசிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கையின் தொழிலாளர் அமைச்சகம், NIOSH, தென் கொரியாவின் குறித்த மாகாண நிர்வாகம், சச்சியோன் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பு, சாங்ஷின் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து தரப்பினரையும் உள்ளடக்கிய புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் இதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட முந்தைய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து, புதிய ஒப்பந்தம் மற்றும் செயற்பாட்டுக் கட்டமைப்பை முன்னெடுப்பதற்கு தொழிலாளர் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.











