அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில், கனடாவின் பொருளாதாரத்தை உள்நாட்டிலேயே வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் அரசாங்கம் தனது 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குச் சுமார் 142 பில்லியன் கனடிய டொலர் புதிய செலவினங்களை முன்மொழிந்துள்ளது.
கனடாவில் தொழில் முதலீடுகளை அதிகரித்தல், நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்தல், மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார இறையாண்மையைப் பாதுகாத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மார்க் கார்னியின் இரண்டாவது வரவு செலவுத் திட்டமான இதில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புதிய செலவினங்கள் சுமார் 142 பில்லியன் டொலராக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், கடந்த வசந்தகால பொருளாதார அறிக்கைக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட 9.5 பில்லியன் டொலர் செலவினங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
அதேவேளை, புதிய அரசாங்கச் செலவினங்களை ஈடுசெய்யும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 159 பில்லியன் டொலர் புதிய வருவாய் மற்றும் சேமிப்புகளை அரசாங்கம் கணித்துள்ளது.
நிறுவன வருமானவரி, தனிநபர் வருமானவரி, எண்ணெய்த் துறையிலிருந்து கிடைக்கும் கூடுதல் வருவாய் மற்றும் அரசாங்கப் பொதுச் சேவைத் துறையில் மேற்கொள்ளப்படும் செலவுக் குறைப்புகள் என்பன இதற்கான முக்கிய ஆதாரங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
2026–2027 நிதியாண்டில் கனடாவின் வரவு செலவுப் பற்றாக்குறை சுமார் 62 பில்லியன் டொலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்தப் பற்றாக்குறை 2030–2031 நிதியாண்டில் சுமார் 53 பில்லியன் டொலராகக் குறையும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
“Masters of Our Destiny” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வரவு செலவுத் திட்டம், அமெரிக்கச் சந்தையை அதிகமாக நம்பியிருக்கும் கனடாவின் பொருளாதார அமைப்பை மாற்றி, உள்நாட்டுத் தொழில்துறைகளையும் முதலீடுகளையும் வலுப்படுத்துவதையும், தேசிய பாதுகாப்பு, கலை மற்றும் கலாசாரத் துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.










