கியூபெக் மாகாணத்தில் உள்ள செயிண்ட் லாரன்ஸ் நதிப் பகுதியில் அமைந்துள்ள ஆளில்லா தீவு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதும் பழங்காலத்தைச் சேர்ந்ததுமான மர்மக் கொள்கலனில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய தீவிர ஆந்தராக்ஸ் (Anthrax) கிருமி எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணக் காவல்துறை (Sûreté du Québec) இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் திகதியன்று கியூபெக் நகருக்கு வடகிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இல் ஓ கான் கார்ட் (Île aux Canards) தீவில் இந்த உலோகக் கொள்கலன் கண்டெடுக்கப்பட்டது.
அதனை மீட்கும் பணியில் கியூபெக் மாகாணக் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
எவ்வித ஆபத்துகளும் நேராமல் இருக்க வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள், அபாயகரமான பொருட்கள் கையாளும் பிரிவு (hazmat team) மற்றும் உலங்குவானூர்தி ஆகியவை வரவழைக்கப்பட்டு, இந்தக் கொள்கலன் மீது தீவிர சோதனை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்தக் கொள்கலனில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள சபீல்ட் (Suffield) இராணுவத் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சாம்பல்-பச்சை நிறத்திலான அந்த உலோகக் கொள்கலனின் மீது “Property Air Force U.S. Army” எனப் பொறிக்கப்பட்டுள்ளதுடன், அது 1942ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்பதற்கான அடையாளமும் காணப்பட்டது.
இந்த நிலையில், வெளியிடப்பட்ட அறிக்கையில், அக்கொள்கலனில் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத திரவப் பொருள் மட்டுமே உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், அந்தத் திரவம் என்னவென்பது குறித்தோ அல்லது அது எங்கு தயாரிக்கப்பட்டது என்பது குறித்தோ காவல்துறை தரப்பில் தெளிவுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.











