நகரசபையின் ஊழியர் சம்பளத் தொகையினை வழங்குவதில் மத்திய அரசு குறைப்புச் செய்து அதனை நகரசபையின் நிதி வருமானத்தில் ஈடுகட்டும் புதிய ஏற்பாட்டினால் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பருத்தித்துறை நகரசபை விசேட அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் 2027 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு திட்டத்தின் முதலாவது வாசிப்பிற்காக நேற்று புதன்கிழமை விசேட சபை அமர்வு நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, 2025 ஆம் ஆண்டில் 53 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் 35 வேலைத்திட்டங்கள் முடிவுறுத்தப்பட்டதுடன், 2026 ஆம் ஆண்டில் 39 மில்லியன் ரூபா மதிப்பீட்டிலான 17 வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகரபிதா தெரிவித்தார்.
தொடர்ந்து 2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான விபரங்கள் சபைக்குத் தெரியப்படுத்தப்பட்டன.
இதில் சோலை வரி மற்றும் ஏனைய வரிகள் (10 மில்லியன்), வாடகை (27 மில்லியன்), நீதிமன்ற தண்டப்பணம் (15 மில்லியன்), முத்திரை தீர்வை (35 மில்லியன்), நிலையான வைப்பு வட்டி (10.5 மில்லியன்), சூரிய மின்படலம் (7.9 மில்லியன்) மற்றும் ஏனைய வருமானங்கள் (79 மில்லியன்) உள்ளடங்கலாக 2027 ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்பட்ட மொத்த மீண்டு வரும் வருமானமாக 182 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
நகரசபையின் நேரடி நிதி வருமானமாக 112 மில்லியன் ரூபா எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஊழியர் சம்பளம் (87 மில்லியன்), வெளிவாரி ஊழியர் சம்பளம் (30 மில்லியன்), காகிதாதிகள் மற்றும் எழுதுபொருட்கள் (8 மில்லியன்), மூலதன சொத்துகள் பழுதுபார்த்தல் (10.9 மில்லியன்), மின்சாரம், தொலைபேசி, தபால் செலவு (15.8 மில்லியன்) மற்றும் ஏனைய செலவுகள் (6 மில்லியன்) அடங்கலாக எதிர்பார்க்கப்படும் நடைமுறை செலவீனம் 158 மில்லியன் ரூபாவாகும்.
அத்துடன் அபிவிருத்தி வேலைகளுக்கான 15 மில்லியன் ரூபா உள்ளடங்கலாக மூலதன செலவீனமாக 24 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சகல உள்ளூராட்சி மன்றங்களும் ஆறு வருடங்களின் பின்னர் தத்தமது சம்பளத் தொகையினை முழுவதுமாக தமது சபை வருமானத்திலேயே ஈடுசெய்ய வேண்டும் என மத்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
படிப்படியாக 100 வீத சம்பளத் தொகையினையும் சபையின் சொந்த வருமானத்தில் ஈடுசெய்யும் நிலை ஏற்படின் முற்றுமுழுதாகவே அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படலாம் எனவும், எனவே வருமானத்தை ஈட்டத்தக்க திட்டங்களை கண்டறிந்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது.











