யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவச் சிறுவர் ஆண்கள் இல்ல மாணவன் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியரை மூன்று இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், வழக்கினை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
சைவச் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு இரவு நேரக் கற்பித்தல் நடவடிக்கைக்காக, இல்லத்தின் முகாமைத்துவ சபையின் அனுமதியின்றி வித்தியா விருத்திச் சங்கத்தின் கல்வித்திட்டப் பணிப்பாளரின் பரிந்துரையில் குறித்த ஆசிரியர் முறையற்ற விதத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியரின் தவறான நடத்தைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முகாமைத்துவ சபையின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்து வந்தபோதிலும், சங்கத் தலைவர் உள்ளிட்டவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது இருந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த ஆசிரியரினால் மாணவர் ஒருவர் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மாணவரை 3 கிலோமீற்றர் தூரத்திலுள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்காது, சுமார் 5 கிலோமீற்றர் தூரத்தில் இணுவில் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்தியசாலையில் அனுமதித்தால் சட்ட நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்ற காரணத்தால், தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துச் சம்பவத்தை மூடி மறைத்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், நேற்று புதன்கிழமை குறித்த ஆசிரியரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலங்களைப் பெற்றனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஆசிரியரை, மூன்று இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.











