கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்ளுக்கு அமைவாக கடந்த 10 ம் மாதம் நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது 45 நாட்கள் கடந்த நிலையில் நெல் பயிர்களுக்கான உரிய நீர் இல்லாமை காரணமாக குறித்த பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமது வயல்களை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் அருகில் காணப்படுகின்ற நீர் நிலைகளை நம்பி தற்பொழுது நீர் பம்பினால் பயிர்கள் மூலம் நீரை பாய்ச்சி வருகின்றனர்.
இதுபோன்று ஒரு காலநிலை முன்னைய காலங்களில் ஒருபோதும் தமக்கு ஏற்பட்டதில்லை எனவும், தற்பொழுது மழையை நம்பி தமது கையில் இருந்த பணத்தை முழுவதுமாக செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது வயல் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இயற்கை இம்முறை தம்மை ஏமாற்றி விட்டதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.











