2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தமது நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க அரசாங்கம் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் பல ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.
கொழும்பில் நடைபெற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்டுள்ள இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நவம்பர் 30 ஆம் திகதி ஆசிரியர்களும் அதிபர்களும் சுகவீன விடுமுறை அறிவித்துப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கம் (Ceylon Teachers’ Union) தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களைப் பாதிக்கும் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஏனைய நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு 2027 வரவு செலவுத் திட்டத்தில் தீர்வுகள் வழங்கப்படவில்லை எனத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டமிடப்பட்ட போராட்டத்தினால் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும் எனத் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பான பாராளுமன்ற விவாதம் டிசம்பர் முதலாம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நவம்பர் 30 ஆம் திகதி திட்டமிட்டே தெரிவு செய்யப்பட்டதாகத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.











