இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை மட்டத்திலான மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (25) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய 17 மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, காலி, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்கள் ஏற்படக்கூடும் என்பதுடன், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளிலும் பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் வெளிப்புற விளையாட்டுகள், விவசாயம் மற்றும் கட்டுமானப் பணிகளைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பான கட்டடங்களுக்குள் அல்லது மூடப்பட்ட வாகனங்களுக்குள் தஞ்சமடையுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மரங்களின் கீழ் நிற்பதையும், கடற்கரை, ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் இருப்பதையும் தவிர்க்குமாறும், மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.











