யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிப்போர் மீது தமது வாகனங்களால் திட்டமிட்டு மோதியும், வாகனங்களுக்கு முன்னால் தமது உடைந்து போன கையடக்கத் தொலைபேசிகளைப் போட்டுவிட்டு அவற்றுக்கு இழப்பீடு கோரி பணத்தினை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இத்தகைய செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸாரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை (18.11.2026) ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
இதன் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் புதிய வடிவிலான பணம் பறிக்கும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், வீதியில் பயணிப்பவர்களின் வாகனத்தின் மீது திட்டமிட்டு மோதிவிட்டு, தமது கைத்தொலைபேசி அல்லது மோட்டார் வாகனம் சேதமடைந்துவிட்டதாகக் கூறி இழப்பீடு கோரிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டினார்.
மேலும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரப் பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பிச்சையெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அவர்களால் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
இது திட்டமிட்ட குழுக்களால் ஒழுங்குபடுத்தப்படுவதுடன், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிச்சையெடுப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த பொலிஸார், உள்ளூராட்சி மற்றும் சமூக சேவைகள் உள்ளிட்ட தொடர்புடைய திணைக்களங்களுடன் இணைந்து இத்தகைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், பொது இடங்களிலிருந்து அவர்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.











