மொண்ட்ரியல்-நார்த் (Montréal-Nord) பகுதியிலுள்ள 39 ஆம் இலக்கக் காவல் நிலையத்தில் பணியாற்றிய மூன்றாவது முன்னாள் பொலிஸ் அதிகாரி மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக கியூபெக் மாகாண அரச சட்டத்தரணி அலுவலகம் இன்று (25.11.2026) அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த முன்னாள் அதிகாரி மீது தாக்குதல் (Assault) குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவ்வலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர் பிறிதொரு தினத்தில் மொண்ட்ரியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்கு என்பதால், இது குறித்து மேலதிக கருத்துக்களைத் தெரிவிக்க முடியாது எனவும் கியூபெக் மாகாண அரச சட்டத்தரணி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வார இறுதியில், மொண்ட்ரியல்-நார்த் காவல் நிலைய அதிகாரிகள் இனவாத மற்றும் பாரபட்சமான செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இது தொடர்பான விசாரணையின் அடிப்படையில், 24 வயதான வின்சென்ட் ரூத்தியர் (Vincent Routhier) மற்றும் 25 வயதான சக்கரி பெல்சில் (Zachary Belzil) ஆகிய இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் முன்னதாக கைது செய்யப்பட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இவர்கள் இருவர் மீதும் தாக்குதல் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அத்துடன், சக்கரி பெல்சில் மீது குற்றவியல் ரீதியான துன்புறுத்தல் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலையாகும் நிபந்தனையின் பேரில் இவர்கள் இருவரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கியூபெக் மாகாண அரச சட்டத்தரணி அலுவலகத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக மொண்ட்ரியல் பொலிஸ் சேவை (SPVM) தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஏனைய குற்றவியல் விசாரணைக் கோப்புகளைத் தமது தொழில்முறை தரநிலைப் பிரிவு தொடர்ந்து கையாண்டு வருவதாக மொண்ட்ரியல் பொலிஸ் சேவை இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.











