மருந்துகள், எரிபொருள், உரம் கிடைக்காமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக்கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இவ்வாறான இருண்ட அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லாமல், புதிய பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 9 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
கடந்த கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது தப்பியோடாமல், நாட்டுக்காக தமது பொறுப்புகளை நிறைவேற்றிய மருந்தக உரிமையாளர்கள் சங்கத்திற்கு ஜனாதிபதி இதன்போது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இலங்கையை வழிநடத்தும் திட்டம் சரியானதென IMF பணிப்பாளர்கள் குழுவின் இரண்டாம் சுற்று கலந்துரையாடலில் சான்றுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதன்படி கடனைச் செலுத்த கால அவகாசம் கிடைத்துள்ளதுடன், தற்போது சீனாவுடன் கலந்துரையாடி வருவதாகவும்
பாரிஸ் கிளப்பில் (Paris Club) உள்ள நாடுகள் மற்றும் ஏனைய கடன் வழங்குனர்களுடன் கலந்துரையாடி உடன்பாட்டை எட்டவும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நிலைமையை சரிசெய்து புதிய பொருளாதாரத்தை நோக்கி நாட்டை கொண்டு செல்லாத பட்சத்தில், மீண்டும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடுமென ஜனாதிபதி கூறினார்.
போட்டி நிறைந்த பொருளாதாரத்தை உருவாக்கி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, புதிய நாட்டை உருவாக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.