சிறுவர் இல்லத்தின் பாதுகாப்பில் இருந்த காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அலுபோமுல்ல பபுனுகம பிரதேசத்தில் வசிக்கும் பெபிலியான சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய 80 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் சிலர் , திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பொரலஸ்கமுவ பிரதேசத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (15) சென்றிருந்த போது சிறுவர் இல்லத்தில் உள்ள கிணற்றிற்கு அருகில் வைத்து காவலாளியின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பாதுகாவரை கொலையை செய்துவிட்டு, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை திருடி, சடலத்தை பெல்லன்வில ஏரியில் வீச அவர்கள் திட்டமிட்டனர். எனினும் முச்சக்கரவண்டியின் உரிமையாளர் அவ்விடத்திற்கு வந்தமையால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
உறங்கிக் கொண்டிருந்த வேளையில் காவலாளி கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலையுடன் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த மற்றுமொரு சிறுவனுக்கு தொடர்புள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
80 வயதுடைய கொலை செய்யப்பட்ட சிக்கு ஹெவெகே பியதாச டயஸ் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை நுகேகொட மேலதிக நீதவான் சஞ்சய் டி சில்வா தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.