கியூபெக் மாகாணத்தில், நாட்டைப் பிரிக்கத் துடிக்கும் ‘பார்ட்டி கியூபெக்வா’ (Parti Québécois – PQ) மற்றும் எவ்வித தெளிவான கொள்கையுமற்ற ‘கோலிஷன் அவினீர் கியூபெக்’ (Coalition Avenir Québec – CAQ) ஆகிய கட்சிகளுக்கு மத்தியில், கூட்டாட்சிக் கொள்கையை (Federalism) முழுமையாகவும் தெளிவாகவும் ஆதரிக்கும் ஒரே உண்மையான அரசியல் சக்தி லிபரல் கட்சி மாத்திரமே என்று, அதன் தலைவர் சார்ள்ஸ் மில்லியார்ட் (Charles Milliard) திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கியூபெக் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த கியூபெக் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து, ஷெர்புரூக் நகரில் உள்ள டெல்டா (Delta) விடுதியில் நடைபெற்ற லிபரல் கட்சியின் பொதுக் குழு மாநாட்டில் (General Council) உரையாற்றும் போதே சார்ள்ஸ் மில்லியார்ட் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
கியூபெக் லிபரல் கட்சியில் (QLP) தாம் பெருமையுடன் பிராந்தியவாதிகளாகவும், தேசியவாதிகளாகவும், அதேவேளை உறுதியான கூட்டாட்சியாளர்களாகவும் (Federalist) இருப்பதாக, அவர் கூறினார்.
கியூபெக் மாகாணத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இறையாண்மை மற்றும் பொதுஜன வாக்கெடுப்பு (Referendum) போன்ற மிக முக்கியமான விவகாரங்களில், தற்போதைய ஆளும் கட்சியான CAQ இரட்டை நிலைப் போக்கைக் கொண்டிருப்பதாக, சார்ள்ஸ் மில்லியார்ட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அண்மையில், கியூபெக் ஆளுங்கட்சி அமைச்சர்களான ஜீன் போலெட், கியூபெக் தனிநாட்டுப் பிரிவினைக்கு எதிராக ‘இல்லை’ (No) என்று வாக்களிப்பதாகக் கூறியிருந்தார்.
அதேவேளை, அவரது சக அமைச்சரான மாத்தியூ லாகோம் கியூபெக் தனிநாட்டுப் பிரிவினைக்கு ஆதரவாக, ‘ஆம்’ (Yes) என்று வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார்.
ஆளும் தரப்பு அமைச்சர்களின் ஒன்றுக்கொண்டு முரண்பாடான இந்த அரசியல் முடிவுகளை, கியூபெக் லிபரல் கட்சியின் தலைவர் தமது உரையில் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











