ஒன்டாரியோ மாகாணம் பிராம்ப்டன் (Brampton) நகரில் இரண்டு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பில், விரிவான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிராம்ப்டனின் மெக்வீன் டிரைவ் (McVean Drive) மற்றும் கன்ட்ரிசைட் டிரைவ் (Countryside Drive) சந்திப்பில் இரண்டு சொகுசு கார்கள் ஒன்றுடன் ஒன்று அதிவேகமாக மோதியமையால் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் ஒரு காரின் முன் இருக்கையில் பயணித்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பீல் பிராந்திய பொலிஸ் (Peel Regional Police) ஊடக அதிகாரி லாரி மெக்கான் (Laurie McCann) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களிலும் பயணித்த மற்ற ஐந்து நபர்களும் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என்றும், அவர்கள் அனைவரும் வெவ்வேறு அளவிலான பலத்த காயங்களுடன் அருகில் உள்ள அதிர்ச்சி சிகிச்சை மையங்களுக்கு (Trauma centres) கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு வாகனம் போக்குவரத்துச் சிவப்பு விளக்கை (Red light) மதிக்காமல் சந்திப்பைக் கடக்க முயன்றதே இந்த உயிரிழப்பிற்குக் காரணம் என, முதற்கட்ட விசாரணையில், தெரியவந்துள்ளது. இந்த விபத்து விசாரணைகளில் வாகனச்சாரதிகள் மதுபானம் உட்கொண்டதற்கான (Alcohol) ஆரம்பக்கட்ட ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று, பீல் பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும் அந்த வாகனங்களின் அதிவேகம் மற்றும் சாரதிகளின் கவனக்குறைவு குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











