கியூபெக் – லோன்குயில் (Longueuil) பகுதியில் கடந்த ஆண்டு 15 வயதுடைய நூரன் ரெஸாயி (Nooran Rezayi) என்ற சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னதாக நடந்த நிகழ்வுகள் தொடர்பாக 11 இளைஞர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆயுதமேந்திய இளைஞர் குழு ஒன்று பொது இடத்தில் நடமாடுவதாக கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி அன்று கிடைத்த அவசர அழைப்பையடுத்து, லோன்குயில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அங்கு காவல்துறை வாகனம் நிறுத்தப்பட்ட வெறும் 10 வினாடிகளுக்குள், நிராயுதபாணியாக நின்ற 15 வயது சிறுவன் நூரன் ரெஸாயி காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்தத் துப்பாக்கிச்சூடு நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு அங்கு அரங்கேறிய சட்டவிரோதச் செயல்கள் தொடர்பாக, 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 11 நபர்ர்கள் மீது, தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிகுதி 6 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை (Summons) விடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதி மற்றும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் கியூபெக்கின் இளம்பருவத்தினருக்கான நீதிமன்றத்தில் (Youth Court) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மொண்ட்ரியல் காவல்துறை ஆய்வாளர் டேவிட் ஷேன் (David Shane) செய்தியாளர்களிடம் பேசுகையில், குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் 4 பேர் இளம் வாலிபர்கள் என்றும் 7 பேர் பதின்ம வயதுச் சிறுவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 100க்கும் மேற்பட்ட மொண்ட்ரியல் காவல்துறை அதிகாரிகள், தெற்குச் கரை (South Shore) பகுதியின் 5 நகராட்சிகளில் நடத்திய சோதனைகளின் விளைவாகவே ஆதாரங்கள் திரட்டப்பட்டு, தற்போது இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.











