அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ( ‘வாரி மஹிம’ ) மன்னார் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாக, விரைவாக புனரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. அந்த வகையில் இன்றைய தினம் (18) அதற்கான பூர்வாங்க நடவடிக்கையாக, குளங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து குறித்த குளங்களை பார்வையிட்டனர்.
இதன் போது பொறியியலாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர்கள், குளங்களைச் சேர்ந்த கமக்காரர் அமைப்புகள், பிரஜாசக்தி தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
மன்னார் மாவட்டத்தில் முதலாவதாக மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் இருக்கும் அலிகண்டல் குளத்தை பார்வையிட்டனர்.
இந்தக் குளத்தை முழுமையாக புனரமைப்பு செய்வதன் ஊடாக, விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் தொடர்ச்சியாகப் பயிர்ச் செய்கையை சரியான முறையில் நடத்துவதற்குரிய வாய்ப்புக் கிட்டும். இக்குளம் ஏற்கனவே ‘டித்வா’ புயலின் காரணமாக முழுமையாக பாதிப்படைந்திருக்கின்றது. எனவே முழுமையாக இது புனரமைப்பு செய்யப்பட இருக்கிறது.
திங்கட்கிழமை மேலும் ஆறு குளங்களை பார்வையிட்டு, விரைவாக அந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.இந்த வருடத்தின் பெரும் போகத்திற்கு முற்பகுதியில் இந்தக் குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டு, விவசாயிகளின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.
அரசாங்கத்தினுடைய விசேடமான செயல்திட்டமாக இந்த விவசாய குளங்கள் புனரமைத்து விவசாயிகளுக்குக் கொடுப்பதன் ஊடாக, நெல் உற்பத்தியை அதிகரித்து இலங்கையில் காணப்படுகின்ற நெல்லினுடைய தட்டுப்பாடு மற்றும் நெல் உற்பத்தி சார் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதற்காக இந்தத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.











