வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தை கிளிநொச்சியில் அமைப்பதற்கான பணிகள் தொடர்பான கலந்துரையாடல் தற்போது
இடம்பெறுகிறது என, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
வடக்கு மாகாண விளையாட்டு திணைக்கள நிர்மாண பணிகள் தொடர்பில், அந்த மாகாண ஆளுநரின் இறுதி பரிந்துரைகளை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தை கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்வது தொடர்பாக அமைச்சரின் உடனடித் தலையீட்டை எதிர்பார்ப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கையின் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த போதே, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன இந்த தகவலைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்ட பின்னரே அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர்
பேராசிரியர் சந்தன அபேரத்ன, இது தொடர்பில் வட மாகாண ஆளுநர் உத்தரவு வழங்கியதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதேவேளை வடக்கு மாகாண விளையாட்டு வீரர்களை தேசிய மற்றும் மாவட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வேலைத்திட்டங்கள்
முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.











