உத்ரா புரொடக்ஷன்ஸ், டி.ஜே. இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிளாக் ஹூமர், ஃபேண்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த கதையாக உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மேலும் அதிகரித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பொன்னிற ஒளி வீசும் மர்ம பெட்டி ஒன்றை கையில் ஏந்தியபடி ஒரு வயதான பாட்டியும் சிறுவனும் நிற்கிறார்கள். அவர்களைச் சுற்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம், பயம் மற்றும் பதற்றம் கலந்த முகபாவனையுடன் அந்த பெட்டியை நோக்கும் காட்சி, கதையின் மையப் புள்ளியாக இந்த மாயப் பெட்டியே அமையப்போகிறது என்பதை உணர்த்துகிறது. மேலும் பழமையான வீட்டின் பின்னணி, ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பணக்கட்டுகள் மற்றும் துப்பாக்கி போன்ற காட்சிகள் திரில் நிறைந்த குடும்பக் கதைக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தகுதிக்கு மீறிய வாழ்க்கை வாழ ஆசைப்படும் ஒரு நடுத்தரக் குடும்பம், அதனால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் எவ்வாறு மீண்டு வருகிறது என்பதையே இப்படம் சுவாரஸ்யமாகப் பேசவுள்ளது. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற திரைப்படங்களின் பாணியில் பிளாக் ஹூமர் கலந்த குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
தருண் விஜய் மற்றும் பிக்பாஸ் புகழ்பெற்ற அக்ஷரா ரெட்டி ஆகியோர் நாயகன்-நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன், சம்பத் ராம் மற்றும் கஜராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது தேனி, விழுப்புரம் மற்றும் செஞ்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.











