வங்கதேசத்தின் மாணவர் புரட்சி மற்றும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு இடையே, புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறும் அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 13-ம் தேதியும், மனுக்கள் பரிசீலனை ஆகஸ்ட் 16-ம் தேதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட வீரியமிக்க மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் மேற்பார்வையில் நடந்த பொதுத்தேர்தலில், தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், 2023-ல் தேர்வு செய்யப்பட்டு இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் மீதமிருந்த முன்னாள் அதிபர் முகமது ஷஹாபுதீன் தொடர்ந்து பதவியில் நீடித்து வந்தார்.
ஆனால், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா வரும் டிசம்பரில் வங்கதேசம் திரும்ப உள்ளதாக அறிவித்த நிலையில், அதிபர் முகமது ஷஹாபுதீன் அவருடன் ரகசியமாகத் தொடர்புகொண்டு பேசியதாகக் தகவல்கள் வெளியாயின. முன்னாள் பிரதமருடனான தொடர்பு குறித்து எழுந்த சர்ச்சைகள் மற்றும் புதிய அரசுக்கும் அதிபருக்கும் இடையேயான கடுமையான கருத்து வேறுபாடுகள் காரணமாக, கடந்த ஜூலை 24-ம் தேதி முகமது ஷஹாபுதீன் தனது அதிபர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற சபாநாயகர் ஹபிஸ் உத்தீன் அகமது இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்று நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். இந்நிலையில்தான், புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு, நாட்டின் அரசியல் சூழலை மீண்டும் நிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.











