இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படும் உரங்களின் விற்பனைக்கு அம்மாநில அரசு திடீரென இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தற்போது காரீஃப் சாகுபடி பருவம் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசின் இந்த அதிரடி முடிவால் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 82 லட்சம் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் iFMS (Integrated Fertilizer Management System) இணையதளத்தில் பதிவாகியுள்ள உரங்களின் கணக்கிற்கும், விற்பனையாளர்களிடம் உள்ள உண்மையான கையிருப்புக்கும் இடையே உள்ள வித்தியாசங்களைச் சரிபார்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை விளக்கமளித்துள்ளது.
மாநில மார்க்கெட்டிங் ஃபெடரேஷன் மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், எம்பி அக்ரோ மையங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் என அனைத்து விநியோக மையங்களுக்கும் இந்தத் தடை உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல், பருப்பு உள்ளிட்ட முக்கியப் பயிர்களுக்கு உரம் இட வேண்டிய இந்த முக்கியமான காலகட்டத்தில் உர விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், பயிர் மகசூல் பெருமளவில் குறையும் என்றும், செயற்கை தட்டுப்பாடு உருவாகி உரங்கள் கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் என்றும் விவசாயிகள் சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.
மேலும், உர விநியோகத்தை உடனடியாகச் சீரமைக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபடப்போவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
இருப்பினும், மாநிலத்தில் போதிய அளவு உர இருப்பு உள்ளதாகவும், சரிபார்ப்புப் பணிகள் நிறைவடைந்ததும் உர விற்பனை மீண்டும் வழக்கம்போல் தொடங்கும் என்றும் வேளாண் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.











