ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் நிலப்பரப்பு அளவை துல்லியமாகக் காட்டும் ‘ஈக்வல் எர்த்’ (Equal Earth) வரைபடத்தை சர்வதேசத் தரநிலையாக ஏற்றுக்கொள்வதற்கான வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
டோகோ நாடு முன்மொழிந்துள்ள இந்த வரைவுத் தீர்மானத்திற்கு ஆப்பிரிக்க ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இது ஒரு அரசியல் விவாதம் அல்ல என்றும், அறிவியல் பூர்வமான உண்மையை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் டோகோவின் வெளியுறவு அமைச்சர் ராபர்ட் டஸ்ஸி வலியுறுத்தியுள்ளார்.
தற்போது உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘மெர்கேட்டர்’ (Mercator) வரைபடம், மாலுமிகளின் கடல்வழிப் பயணத்திற்காக 1569-ஆம் ஆண்டு ஃபிளெமிஷ் நிலப்படவியலாளர் ஜெரார்டஸ் மெர்கேட்டரால் உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பில் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பகுதிகள் சிறியதாகவும், உயர் அட்சரேகைப் பகுதிகள் மிகவும் பெரியதாகவும் காட்சியளிக்கின்றன. உதாரணத்திற்கு, மெர்கேட்டர் வரைபடத்தில் கிரீன்லாந்தும் ஆப்பிரிக்காவும் ஒரே அளவில் இருப்பது போல் தோன்றினாலும், உண்மையில் ஆப்பிரிக்கா கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரிய நிலப்பரப்பைக் கொண்டதாகும்.
இத்தகைய வரைபடங்கள் மேலைநாடுகளின் ஆதிக்கச் சிந்தனையைப் பிரதிபலிப்பதாகவும், ‘வரைபட ரீதியிலான காலனித்துவம்’ (Cartographic colonialism) என்றும் சமூக ஆர்வலர்களும் புவியியலாளர்களும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
2018-இல் உருவாக்கப்பட்ட ‘ஈக்வல் எர்த்’ வரைபடம் அனைத்து நாடுகளின் நிலப்பரப்பையும் அதன் உண்மையான ஒப்பீட்டு அளவில் துல்லியமாகக் காட்டுகிறது.
ஐ.நா.வில் இந்தத் தீர்மானம் நிறைவேறினால், சர்வதேச வர்த்தகம், கல்விப் பாடத்திட்டங்கள் மற்றும் அன்றாடத் தொழில்நுட்பங்களில் காலம் காலமாக நிலவி வரும் இந்த வரைபடச் சார்புநிலை மாறி, ஆப்பிரிக்காவின் உலகளாவிய நிலை குறித்த நேர்மறையான கண்ணோட்டம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.











